கொரோனா கால பொது முடக்கத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் ரூ.39 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பொது முடக்க காலத்தில் மக்கள் தங்களது தேவைகளுக்கு, வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து 75 சதவிதத்தை ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் மாத அறிவித்திருந்தார். இதற்காக, வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் கொரோனா வைரஸ் தேவைக்காக பணம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பயன்படுத்தி, மார்ச் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ரூ.39,403 கோடி பணத்தை மக்கள் எடுத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுத்த மாநிலங்கள் பட்டியலில் ரூ.7,838 கோடியுடன் மகாராஷ்ட்டிரா முதல் இடத்திலும், ரூ.5,744 கோடி எடுத்து கர்நாடகா 2-வது இடத்திலும் உள்ளன. இதில் 3-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. அதாவது, தமிழக மக்கள், இந்த கொரோனா காலத்தில் ரூ. 4,985 கோடியை தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுத்து செலவு செய்துள்ளனர்.