இந்தியாவில் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 ரூபாய் 48 காசாகவும் டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாய் 12 காசாவும் அதிகரித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச்செலாவணி மாற்றங்களுக்கு ஏற்ப விலையேற்றப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விலையேற்றத்தை குறைக்க பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
மேலும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த கோரிக்கைகள் பலன் தராததால் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியில் டீசல் விலை ரூ.64.58 ஆக உள்ளது. இதற்கு முன்பாக பிப்ரவரி 7ம் தேதி ரூ.67.22 ஆக உயர்ந்திருந்தது. பெட்ரோ விலை இதற்கு முன்பாக 2014ம் ஆண்டு 76.06 ஆக உயர்ந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக கடந்த 15 மாதங்களில் பெட்ரோ விலை ரூ.11.77, டீசல் விலை ரூ.13.47-ம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இதன் மூலம் 2016-17 வருடத்தில் மத்திய அரசுக்கு ரூ.2,42,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2014-15 வருடத்தில் ரூ.99 ஆயிரம் கோடியாக இருந்தது.