உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பொறியாளரான இவர், தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அவர் கைப்பட எழுதிய 24 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனது நிம்மதியை அவர்கள் கெடுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட சுபாஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்து பேசியிருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர். எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீசார் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டங்களை மறு ஆய்வு செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். திருமண நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட பரிசுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், ஐபிசி சட்டம் 498ஏ பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் 2010-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தாக்கல் செய்தது குறித்து விஷால் திவாரி, ”சமீபத்தில் பெங்களூருவில் 34 வயதான அதுல் சுபாஷ் என்ற தொழில்நுட்ப வல்லுநரின் சோகமான தற்கொலை, திருமண தகராறு, வரதட்சணைத் தடைச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஆண்களின் மனநலம் குறித்து நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அதுல் சுபாஷ் தன் கருத்தைப் பதிவுசெய்தார்.
80 நிமிட வீடியோவில் அவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிப்பதற்காக தன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகளை பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். அதுல் சுபாஷ் தனது 24 பக்க தற்கொலைக் குறிப்பில் நீதித்துறையை விமர்சித்துள்ளார். இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். தவறான வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் சிக்கிய பின்னர் திருமணமான ஆண்களின் கடுமையான நிலை மற்றும் தலைவிதியைப் பார்த்துத்தான் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் ஐபிசியின் பிரிவு 498A ஆகியவை வரதட்சணைக் கோரிக்கைகள் மற்றும் துன்புறுத்தலில் இருந்து திருமணமான பெண்களைப் பாதுகாப்பதற்காகவே இருந்தன. ஆனால் நம் நாட்டில், கணவன் - மனைவி இடையே இந்தச் சட்டங்கள் தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும், கணவன் குடும்பத்தை ஒடுக்குவதற்கும் ஆயுதங்களாக மாறுகின்றன. மேலும், இந்தச் சட்டங்களின்கீழ் திருமணமான ஆணின் தவறான தாக்கங்கள் காரணமாக பெண்களுக்கு எதிரான உண்மையான மற்றும் உண்மைச் சம்பவங்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து அவர், “வரதட்சணை வழக்குகளில் மனிதனைப் பொய்யாக்கும் பல சம்பவங்கள் மற்றும் வழக்குகள் மிகவும் சோகமான முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளன. மேலும், நமது நீதி மற்றும் குற்றப் புலனாய்வு அமைப்பு மீதும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இது ஒரு அதுல் சுபாஷைப் பற்றியது மட்டுமல்ல, மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளால் தற்கொலை செய்துகொண்ட பல லட்சம் ஆண்கள் உள்ளனர். வரதட்சணைச் சட்டங்களின் மோசமான துஷ்பிரயேகம், அவை இயற்றப்பட்ட இந்தச் சட்டங்களின் நோக்கத்தைத் தோற்கடித்துவிட்டன. இந்த வழக்குகள் கணவன் மற்றும் மனைவியின் வாழ்க்கை மற்றும் தொழில்களில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகள் மீது எதிர்மறையான வடிவத்தில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது அவர்களின் மனநல நடத்தையைப் பாதிக்கிறது. இது அவர்களின் சரியான வளர்ச்சியை அழிக்கக்கூடும்.
தற்போதுள்ள வரதட்சணைச் சட்டங்கள் மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் ஆகியவற்றை மறுஆய்வு செய்து சீர்திருத்தம் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயேகம் நிறுத்தப்பட்டு, அப்பாவி ஆண்கள் காப்பாற்றப்பட முடியும். வரதட்சணைச் சட்டத்தின் உண்மையான நோக்கம் தோற்கடிக்கப்படக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.