தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்ததாக பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. ஆனால் இந்தாண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்காக மக்கள் புரட்சி வெடித்து. தொடர்ச்சியாக ஒருவார காலமாக நடைபெற்ற மக்கள் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசின் காட்சிப்படுத்தும் விலங்குகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்ததாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் உச்சநீதிமன்றத்தில் பீட்டா சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி மிருகவதை நடந்துள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் எனவும் பீட்டா வலியுறுத்தியுள்ளது.