German Shepherd
German Shepherd Twitter
இந்தியா

மும்பை: பத்து வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்; 45 தையல்களுடன் உயிருக்கு போராடும் சிறுமி

Jayashree A

தனி வீடுகளில் வளர்க்கப்படும் பெரும்பாலான நாய்கள் வீட்டின் பாதுகாப்பை கருதியே வளர்க்கப்படுகிறது. ஆனால்,சென்னை மும்பை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வளர்க்கப்படும் பெரும்பாலான நாய்கள் வீட்டின் பாதுகாப்பை தாண்டி செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகள் சிலசமயம் அடுத்தவர்களுக்க்கு இம்சையையும் தரும்.

அப்படி ஒரு சம்பவம்தான் மும்பை அந்தேரி பகுதியில் நடந்துள்ளது.

மும்பை அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ரூபேஷ், ஷிங்கிங் தம்பதியினர். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இவர்களின் குடியிருப்பை ஒட்டி அடுத்த குடியிருப்பில் வசித்து வருபவர், German Shepherd வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளது.

இச்சமயத்தில் ரூபேஷின் பத்து வயது சிறுமி அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்ற சமயத்தில், பக்கத்துவீட்டு வளர்ப்பு நாய் சிறுமியைபார்த்ததும், வெளியில் பாய்ந்து வந்து கடித்துக் குதறி இருக்கிறது. சிறுமியின் அலறல் சத்தத்தைக்கேட்ட ரூபேஷ் தம்பதியினர், தங்களது மகளை நாயிடமிருந்து காப்பாற்றி அருகில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகும் மருத்துவர்கள், சிறுமியின் உடலில் 45 தையல்கள் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தையின் நிலை அறிந்து வளர்ப்பு நாயின் உரிமையாளார் மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டாலும், ரூபேஷ் தம்பதியினர் நாயின் உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த வளர்ப்பு நாயானது ஏற்கெனவே மூன்று முறை மற்றவர்களை கடித்துள்ளது என்றும், இது குறித்து நாயின் உரிமையாளாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால், இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.