இந்தியா

பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தது முத்தலாக்கிற்கு அல்ல: தொகாடியா

webteam

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகவே பாஜகவுக்கு மக்கள் வாக்களித்ததாகவும், முத்தலாக் தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு அல்ல என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவுரங்காபாத் சென்றுள்ளார். அங்கு பேசியவர்,  “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குத் தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர், முத்தலாக் தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு அல்ல. ராமர் கோயில் கட்டுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும், கூடிய விரைவில் ராமர் கோயில் கட்ட வேண்டும். நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் இதுவரை கோயில் கட்டப்படவில்லை என்பதால், இது தொடர்பாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.மசூதி இல்லாமல் கோயில் கட்டப்பட வேண்டும். இந்து சமுதாயம் ராமர் கோயிலுக்காக காத்திருக்கிறது.எனவே அது கட்டப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.