delhi
delhi ptweb
இந்தியா

டெல்லி: இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததே இல்லை... யமுனை வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்!

PT WEB

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் இடைவிடாது கனமழை பொழிந்தது. அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் மழை பெய்ததன் காரணமாக டெல்லிக்குள் ஓடும் யமுனை நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகளவாக 208 மீட்டரை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியின் பல முக்கிய இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

அதேபோல் கனமழை காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் அமைந்துள்ள "சிவில் லைன்ஸ்" பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இன்று காலையில் கெஜ்ரிவால் இல்லம் அமைந்துள்ள "சிவில் லைன்ஸ்" பகுதியில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல யமுனை நதி கரை ஓரம் உள்ள பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது எனவும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த குடிசை பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவிலிருந்தே, யமுனை நதியின் நீர் டெல்லியில் உள்ள தாழ்வான பகுதிகளில் புகுந்து பல இடங்களில், சாலைகளில் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மழை

குறிப்பாக ரிங் ரோடு அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் குடியிருப்புகளை இரவில் நீர் சூழ்ந்த நிலையில், இன்று காலையில் அந்த பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பத்திரமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யமுனை நதி மீது கட்டப்பட்டுள்ள பல்வேறு பாலங்களின் இரண்டு பகுதிகளிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த டெல்லிக்கும் குடிநீர் வழங்கி வரும் வஜிரபாத், சந்திரவால், ஓக்லா உள்ளிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை ஆற்றில் ஓடும் நீரின் அளவு குறைந்தவுடன் மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன்படி வசீராபாத், காஷ்மீரி கேட், ஜிடி கர்னல் ரோடு, நீம் கரோலி கௌசாலா, யமுனா பஜார், விஸ்வகர்மா காலனி மற்றும் யமுனா பேங்க் போன்ற பகுதிகள் நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.