இந்தியா

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்

kaleelrahman

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள், அச்சத்தில் வீதிகளை நோக்கி ஓடிவந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு வரை எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்தார். பஞ்சாப்பை போல் தலைநகர் டெல்லியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைத்து மக்களின் பாதுகாப்பிற்கு பிரார்த்திப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஹரியானா, உத்தராகண்ட் , இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.