கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்புகிறார்கள் இவர்கள். முகாம்களில் இருந்து வீடு திரும்பியது ஒரு புறம் நிம்மதி என்றாலும், மகிழ்ச்சியும் பாதுகாப்பும் நிறைந்திருந்த வீடுகள், உருக்குலைந்து கிடப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்துகின்றனர்.
மணிப்பூரில் 2023 மே மாதம், மெய்தி - குக்கி இனத்தவர் இடையே மூண்ட கலவரம், 250க்கும் அதிகமானோரை பலி கொண்டது. வீடுகளில் வசித்த 60 ஆயிரத்துக்கும் அதிகமானோரை, ஒரே இரவில் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அனுப்பியது வன்முறை. மேற்கு இம்பால் மாவட்டத்தில், முகாம்களில் இருந்த காங்சுப் கிராமத்தினர், இப்போது வீடு திரும்பியுள்ளனர். கலவரத்தில் சிதைந்து போன வீடுகள், செடிகொடிகள் வளர்ந்து, இப்போது உயிரே இல்லாமல் குட்டிச்சுவராகத் தான் இருக்கின்றன. தீக்கிரையானது வீடுகள் மட்டுமல்ல, எங்கள் வாழ்வும் தான் என்பது அவர்களின் வேதனை. அரசு தங்களை முகாம்களில் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும், தங்கள் வீட்டில், தங்கள் இயல்புடன் இருக்கும் உணர்வு, அங்கு இல்லை என்கிறார்கள்.
குக்கி - மெய்தி என இரு சமூகங்களையும் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தங்கள் வாழ்நாளில், முழுமையாக 2 ஆண்டுகளை முகாம்களில் கழித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர், ஒவ்வொரு நாளையும் நிம்மதியே இன்றி, கடுமையான மனச்சுமையுடன் கடத்தி வருகிறார்கள். துயரமும் காத்திருப்பும் நம்பிக்கையும்தான் அவர்களின் சொத்து.
இப்போது, காங்போக்பி மாவட்டம் ஃபைஜாங் பகுதியில் உள்ள முகாமில் மட்டும், 184 குடும்பங்களைச் சேர்ந்த 896 பேர் வசிக்கின்றனர். சிறார்கள் தங்கள், குழந்தைப் பருவத்தின் இனிமையை இழந்துள்ளனர். இளைஞர்கள் சிலர் படிப்புக்காகவும் வேலைக்காகவும் முகாம்களில் இருந்து விடைபெற்றுள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன என்பது மிகப்பெரிய கேள்வி.
மறுவாழ்வுக்கான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. உண்மையில் மறுவாழ்வு என்பது, வீடுகள் கட்டிக் கொடுப்பது மட்டுமல்ல. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளோடு, நிரந்தர அமைதியையும் நிலையான பாதுகாப்பையும் நிலைநாட்டுவது தான் என்பது பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பு.