அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அசாம் மாநிலத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்தார்.
இதனிடையே அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சில இடங்களில் பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டதுடன் உருவ பொம்மை எரிப்பு, கறுப்பு பலூன்கள் பறக்க விடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இது தவிர ஒரு அமைப்பு 12 மணி நேர வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் வடக்கு அசாம் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் குடிமக்கள் பதிவேடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டங்கள் நடைபெற்றன.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசின் மசோதா வழிவகுக்கிறது. இம்மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, குடியுரிமைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.