குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத மக்கள் தங்களின் சட்ட வாய்ப்புகளை மேற்கொள்ளும் வரை கைது செய்யப்படமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. எனவே இவர்கள் தங்களின் உரிமைகளை இழக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,“தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் இது பற்றி முறையிட அவர்களுக்கு 120 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் முறையீடு குறித்து விசாரிக்க கூடுதலாக 200 வெளிநாட்டவர் தீர்ப்பு ஆணையம் (Foreigners Tribunal) இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களை யாரும் தற்போது கைது செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு உள்ள அனைத்து சட்ட வாய்ப்புகளை செய்து முடிக்கும் வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்பட மாட்டாது. அவர்கள் மற்ற குடிமக்களை போல் அனைத்து உரிமைகளையும் உடையவர்களாகவே இருப்பார்கள். அத்துடன் இந்த மக்கள், சட்ட உதவிகளை பெற அசாம் மாநில அரசு மாவட்ட சட்ட உதவி ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.