இந்தியா

‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..?’

‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..?’

rajakannan

ஒரு கிராமத்தின் வயல்வெளியில் தனது பயணத்தை தொடங்கிய தங்க மங்கை ஹிமா தாஸ், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார்.  பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஸ் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ஹிமா தாஸ் பற்றி பேச்சுகளும், செய்திகளும் அதிகம் வலம் வந்தன. லட்சக்கணக்கான மக்களுக்கு அவரது பெயர் நினைவில் நின்றிருக்கும். அதுவும், பதக்கம் பெறும் நிகழ்ச்சியில் நம்முடைய தேசிய கீதம் இசைத்த போது, அவர் கண்ணீர் வழிந்தோட மரியாதை செலுத்தியது அனைவரையும் உருக வைத்தது.

இப்படி நாட்டிற்கு பெருமை சேர்ந்த ஒரு தங்க மங்கையை கூகுளில் லட்சக்கணக்கானோர் தேடியுள்ளார். ஆனால், ஹிமா தாஸை தேடிய விதத்தில் தான் இந்தியாவின் மோசமான மனநிலை வெளிப்பட்டுள்ளது. அதிகமானோர் ஹிமா தாஸ் என்ற பெயரில் தான் தேடியுள்ளார்கள். ஆனால், அதற்கு அடுத்தபடியாக ஹிமா தாஸ் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று இந்தியர்கள் தேடியுள்ளார்கள்.

இதேபோல்தான், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பிவி சிந்து சில்வர் பதக்கம் வென்ற போதும் அவரது சாதி என்ன என்று தான் அதிகமானோர் தேடினர்.

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் செய்தவர்களை இதைவிட எப்படி அவமதிக்க முடியும் என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளார்கள்.