வாட்ஸ் அப் மூலம் உளவு பார்த்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் தலைமையிலான 2 நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விசாரிக்க உள்ளன.
வாட்ஸ்அப் மூலம் உளவு பார்த்த விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே உள்ளது. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா மற்றும் சசி தரூர் ஆகிய எம்பிக்கள் தலைமையிலான 2 நாடாளுமன்ற குழுக்கள் விசாரிக்க உள்ளன.
மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் இக்குழுக்கள் வரும் 15-ம் தேதி விசாரணை நடத்தும் என தெரிகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தியின் செல்போனை சிலர் உளவு பார்த்திருக்கலாம் என அவரிடமே வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு இஸ்ரேலிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இச்சூழலில் இந்தியாவில் 121 இந்தியர்களின் தகவல்கள் இஸ்ரேலிய மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதமே மத்திய அரசிடம் தெரிவித்ததாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
உளவு விவகாரத்தில் வாட்ஸ் அப் அளித்துள்ள விளக்கத்தை மத்திய அரசு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் வாட்ஸ் அப் அளித்துள்ள விளக்கங்கள் போதுமானதாக இல்லை என அரசுத் தரப்பு கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆயிரத்து 400 பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்கள் தங்கள் தளம் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது. இத்தகவல் தற்போது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது