நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியின் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கள் செல்போன்களை ஒட்டு கேட்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
” உளவு மென்பொருளை அரசு பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? குறிப்பாக தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தினால் என்ன தவறு? தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. உளவு மென்பொருள் வைத்திருப்பது தவறு அல்ல. அது யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மையான கேள்வி.
பெகாசஸ் மென்பொருள் தொடர்பான அறிக்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, இதில் இடம்பெற்றுள்ள தகவலை பொதுவெளியில் வெளியிட முடியாது. ஆனால் தங்களுடைய செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு அதுபற்றி தெரிவிக்க முடியும். ஆம் தனிநபரின் அச்சம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் அவற்றை தெருக்களில் நடத்தப்படும் விவாதத்துக்கான ஆவணமாக ஆக்க முடியாது.
எனினும், தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களுடன் எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அமெரிக்க நீதிமன்றத்தில் ஹேக்கிங் சம்பவங்களை வாட்ஸ்அப் நிறுவனமே முன்வந்து தெரிவித்துள்ளது. எனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவரங்களை வெளியிட வேண்டும்” என்றார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.