மெஹபூபா முஃப்தி எக்ஸ் தளம்
இந்தியா

பஹல்காம் தாக்குதல் | ”முதலில் உதவியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான்” - மெஹபூபா முஃப்தி!

”பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான்” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, இந்த தாக்குதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் மதரீதியாக தொடர்புபடுத்தி வெறுப்புப் பிரசாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பாகப் பதிலளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி, ”பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

மெஹபூபா முஃப்தி

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய ஊடகங்கள், விஷத்தை பரப்பிக்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். அதில் அவர், “பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த ஆதில் ஷா பற்றி அவர்கள் பேசவில்லை. காயமடைந்தவர்களை மைல்கணக்கில் நடந்துசென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றி தேசிய ஊடகங்கள் பேசவில்லை. இதேபோல சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றிய டாக்சி ஓட்டுநர் பற்றியும் பேசவில்லை. ராணுவமும், பாதுகாப்புப்படைகளும், அரசும் அதன் பிறகுதான் உதவ வந்தன. சுற்றுலாப்பயணிகளுக்கு உள்ளூர் மக்கள்தான் உதவினர். மருத்துவமனையில் தங்கள் ரத்தத்தை கொடுத்து அவர்கள் காப்பாற்றினர். அவர்கள் முஸ்லிம்கள், காஷ்மீரிகள். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.