மைதானத்தில் அணைக்கப்பட்ட விளக்குகள் pt web
இந்தியா

போர் பதற்றம்.. பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி...

பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி பாதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கேஷ்வர்

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. போட்டி ஆரம்பிக்கும் முன்பே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ முழு வீச்சில் நடத்தப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி போட்டிகளை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

ஆனாலும், போட்டி நடத்தப்பட்டது. முதலில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 122 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், மைதானத்திலிருந்த இரண்டு கோபுர விளக்குகள் அணைந்தன. இது பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு வேண்டுமென்றே அணைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விளக்குகள் செயலிழந்ததா எனக் கேள்வி எழுந்தது. இதன் தொடர்ச்சியாக வீரர்களும் நடுவர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

சற்று நேரத்திலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுப்புறத்தில் ஏற்பட்ட மின்தடை மற்றும் மைதானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒளிபரப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்துவரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுமுனையில், ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. பாகிஸ்தான் வீசிய 8 ஏவுகணைகளை இந்திய ராணுவம் தகர்த்துள்ளது. ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக சைரனும் ஒலிக்கப்பட்டது.