இந்தியா

காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக பேடிஎம் நிறுவனர் கைது

webteam

டெல்லியில் காரை தாறுமாறாக இயக்கி காவல் துணை ஆணையர் வாகனத்தின் மீது மோதியதாக Paytm நிறுவனர் விஜய் ஷர்மா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பேடிஎம் நிறுவனர் விஜய் ஷர்மா, தெற்கு டெல்லியில் காவல் துணை ஆணையரின் வாகனத்தின் மீது தனது காரை மோதியதற்காக பிப்ரவரி 22 அன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வெளியே காவல் துணை ஆணையர் பெனிடா மேரி ஜெய்க்கரின் வாகனத்தை விஜய் சர்மா தனது ஜாகுவார் லேண்ட் ரோவர் காரில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. காவல் துணை ஆணையரின் டிரைவர் தீபக் காரில் பெட்ரோல் நிரப்ப சென்று கொண்டிருந்தார். கார் மீது மோதிய பிறகு, விஜய் சேகர் சர்மா சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் தீபக் காரின் எண்ணை குறித்து வைத்து விபத்து குறித்து புகார் அளித்தார். அதன்படி, மாளவியா நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (அவசரமாக அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த கார் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அந்த காரை ஓட்டிச்சென்றது தெற்கு டெல்லியில் வசிக்கும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் கைது செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, குற்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஜாமீன் பெறக்கூடிய பிரிவின் கீழ் வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.