அஜித் பவார், சரத் பவார்
அஜித் பவார், சரத் பவார் pt web
இந்தியா

இரண்டாக பிளக்கப்பட்டுள்ள பவார் குடும்பம்; சரத்பவாருக்கு பின் அணிதிரளும் அஜித்பவார் குடும்பத்தினர்!

கணபதி சுப்ரமணியம்

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, பாஜகவுடன் கைக்கோர்த்த அஜித் பவாருக்கும், சரத் பவாருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் போக்கு நிலவு வருகிறது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில், பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் பாராமதி தொகுதிக்கு அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளரால், பவார் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் மோசமடைந்துள்ளது.

பாராமதி தொகுதியில், மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பாக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே போட்டியிட உள்ள நிலையில், அஜித் பவார் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி சார்பில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சரத் பவாரின் உறவினர்கள் பலரும் அஜித் பவாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் பவார், சுனேத்ரா பவார், சுப்ரியா சுலே

அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் சமீபத்தில் அஜித் பவார் கட்சியை உடைத்தது தவறு என வெளிப்படையாக பேசிய நிலையில், அவரது மகன் யோகேந்திரா, மக்களவைத் தேர்தலில் சுப்ரியா சுலேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்தார். இதேபோல் அஜித் பவாரின் மற்றொரு உறவினரான ரோஹித் பவார் வெளிப்படையாகவே சுப்ரியா சுலேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பவார் குடும்பத்தை இரண்டாக பிளந்துள்ளது.

இதற்கிடையே, பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா ஷிண்டே பிரிவை சேர்ந்த விஜய் ஷிவ்தாரே, பாராமதி தொகுதியில் தானே போட்டியிட்டு பவார் குடும்பத்தை தோற்கடிக்க உள்ளதாக அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் பவார், இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. பாராமதி மக்களவை தொகுதியின் ஒரு பகுதியான புரந்தர் சட்டசபை தொகுதியில் விஜய் ஷிவ்தாரே கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைய அஜித் பவார் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மும்பை வடகிழக்கு தொகுதியில் தந்தை-மகனுக்கு இடையே போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு வேட்பாளராக அமோல் கீர்த்திகர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சிவசேனா ஷிண்டே பிரிவு சார்பில் அமோலின் தந்தை கஜானந்த் கீர்த்திகரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் தந்தை-மகன் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்னைகளுக்கு இடையே, மகாராஷ்டிராவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிப்பாளர்கள் என்பது ஆவலுடன் உற்று நோக்கப்படுகிறது.