இந்தியா

ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா விரைவில் துண்டாகிவிடும் - பவன் கல்யாண் எச்சரிக்கை

ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா விரைவில் துண்டாகிவிடும் - பவன் கல்யாண் எச்சரிக்கை

rajakannan

தெலுங்கானாவைப் போல் ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா தனி மாநிலமாக பிரிந்துவிடும் என்று நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஸ்ரீகாகுலம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது உத்தராந்திரா. இதனை கலிங்க ஆந்திரா என்று அழைப்பார்கள். இந்த மூன்று மாவட்டங்களும் ஒரு காலத்தில் கலிங்க பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தப் பகுதியின் மக்கள் தொகை 93,32,060. 

இந்நிலையில், உத்தராந்திராவில் உள்ள மூன்று மாவட்டங்களில் பவன் கல்யாண் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாவட்டங்களில் உள்ள ஜனசேனா கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அமராவதி நகரை உருவாக்குவதிலேயே முழுக் கவனத்தை செலுத்தி வரும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்ற பகுதிகளை புறக்கணிப்பதாகக் கூறி இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

வடக்கு ஆந்திராவில் அறிவுஜீவிகள் சிலரிடம் உரையாடிய பவன் கல்யாண், “ஆந்திர மாநில ஆளும் தரப்பினரின் பேராசை, கொடுமை, ஒடுக்குமுறை தொடர்ந்தால், உத்தராந்திரா அடுத்த சில ஆண்டுகளில் தனி மாநிலமாக பிரிந்துவிடும்” என்று எச்சரித்தார். பவன் கல்யாண் மேலும் பேசுகையில், “வடக்கு ஆந்திரா முழுவதும் பசுமையான நிலங்கள், இயற்கை வளங்கள் உள்ளவை. இருப்பினும், வடக்கு ஆந்திரா புறக்கணிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை எடுப்பதில் ஊழல் நடக்கிறது. கொள்ளை அடிப்பதற்கான அனைத்து திட்டங்களும் அரசு திட்டங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது” என்றார். 

கூட்டம் முடிந்த பின்னர் இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பவன் கல்யாண் பதிவிட்டார். தங்களுடைய சுயமரியாதை, கண்ணியம் மற்றும் அரசியல் பொருளாதார சமநிலை ஆகியவற்றிற்காக உத்தராந்திரா மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அறிவுஜீவிகள் வலிமையான இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார். 

முன்னதாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு ஜுன் 2ம் தேதி பிரிந்தது. தெலுங்கானா பிரிந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், ஆந்திராவில் இருந்து உத்தராந்திரா பிரிந்துவிடும் என பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.