பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சர்குனா கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 101, 102-ம் எண் மையங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலப் பிரதேசத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, உத்தரப் பிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவிலுள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் தேசம் பெரியதுதான் என்றாலும் விரைவில் தேர்தலை முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்தக் கோடையில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது தொல்லை கொடுக்கக் கூடியது’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள சர்குனா கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 101, 102-ம் எண் மையங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.