இந்தியா

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை - தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர்

rajakannan

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பெய்து வரும் கன மழை காரணமாக நாலந்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மருத்துவமனை வளாகம் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் கட்டடங்களில் வெள்ளம் புகுந்தது. ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மருத்துவமனை உள்ளே சூழ்ந்துள்ள வெள்ளத்தில் மீன்கள் நீந்திச் செல்கின்றன. படுக்கைக்கு கீழே மழை நீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பீகார் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனை இது. 100 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் 750 படுக்கை அறைகள் உள்ளன. நோயாளிகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் உள்ளதாகவும், மின்சாரம் தண்ணீரில் பாய்ந்து தாக்கிவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறினார். அரசு மருத்துவமனை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், பீகார் சுகாதாரத் துறை அமைச்சர் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதனிடையே, கனமழையால் துணை முதலமைச்சர் சுஷில் மோடியின் வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாட்னா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாட்னா நகரில் வசித்து வரும் அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடியின் வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுஷில் மோடி உத்தவிட்டார்.