சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அரங்கேறியிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ளது நியூரோ சயின்ஸ் மருத்துவமனை. அங்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதிர் அதிகாரி என்ற நோயாளி ஒருவர் எப்படியோ அந்த மருத்துவமனையில் எட்டாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியேறி இருக்கிறார்.
விஷயம் அறிந்த சுதிரின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க அவர்கள் மூலம் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸும், தீயணைப்புத்துறையினரும் சுதிர் அதிகாரியை கீழே குதிக்க விடாமல் மீட்க பல்வேறு வழிகளில் முயன்றிருக்கிறார்கள்.
அதன்படி, சுதிர் இருந்த பகுதியை நோக்கி ஏணியை கொண்டு சென்றபோது, அவர் கீழே குதிக்க எத்தணித்திருக்கிறார். இதனால் உடலில் அங்கங்கே அவருக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், சீருடை அணிந்திருந்த போலீசார், தீயணைப்புத்துறையினரை அருகே நெருங்க விடவும் சுதிர் மறுத்திருக்கிறார்.
அதனால் அவர் கீழே விழுந்தால் பெரிதளவில் அடி ஏதும் படாதவகையில் மெத்தையும், வலைகளும் விரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மீட்புக்குழுவினரின் முயற்சியை மீறி சுதிர் கீழே குதித்திருக்கிறார்.
இதனால் அவரது விலா, தலை மற்றும் இடது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கீழே விழுந்த சுதிருக்கு அதே மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதியம் 1 மணிவாக்கில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் மூடப்பட்டிருக்கிறது.
ALSO READ: