டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நான்காவது முறையும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் ஆம் ஆத்மியும், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிடும் முனைப்பில் பாரதிய ஜனதாவும் செயலாற்றின.
தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையிலும் அதுவே எதிரொலிக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
காலை 10.45 மணி நிலவரப்படி பாஜக 40 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 30 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கட்சிகளின் மூத்த தலைவர்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து வயநாடு எம்பி பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்துப் பேசிய அவர், “எனக்கு தெரியவில்லை. நான் இன்னும் முடிவுகளைப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சரும் கல்காஜி தொகுதியின் வேட்பாளருமான அதிஷி வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில், டெல்லி மக்கள் நன்மையுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் நான்காவது முறையாக முதலமைச்சராக வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.
கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ரமேஷ் பிதுரி, மூன்றாம் சுற்றின் முடிவில் 12494 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிஷி 11455 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளரை விட 1039 வாக்குகள் பின்னடைவில் இருக்கிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான அல்கா லம்பா மொத்தமாகவே 1134 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் சிக்கல் இருப்பதாக காங்கிரஸ் ஏற்கனவே கூறத் தொடங்கிவிட்டது. அவர்கள் நிச்சயமாக இதுபோன்ற சாக்குப்போக்குகளைச் சொல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.