ராகுல் காந்தி, மன்மோகன் சிங் pt web
இந்தியா

“வழிகாட்டியை இழந்துவிட்டேன்” - ராகுல்காந்தி; மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PT WEB

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங் பங்கு மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு மன்மோகன் சிங் ஆற்றிய சேவை என்றும் நினைவுகூறப்படும் என்றும், மன்மோகன் சிங்கின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு என்றும் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், தன் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை இந்தியா இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எளிய பின்னணியில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்த மன்மோகன் சிங், நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக விரிவான முயற்சிகளை மேற்கொண்டவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். நாடாளுமன்றத்திலும் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் நுண்ணறிவு மிக்கவையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.

எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தன்னுடைய வழிகாட்டியை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தின் மீதான மன்மோகன் சிங்கின் புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தானும், அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்களும் சேர்ந்து அவரை என்றும் நினைவுகூர்வோம் என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தென்னக மக்களின் குரல் தேசிய அளவிலான திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் எதிரொலிப்பதை மன்மோகன் சிங் உறுதி செய்ததாக பதிவிட்டுள்ளார். பிரதமர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகுந்த வேதனையை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பொருளாதாரத்திற்கு அவர், அளப்பறிய பங்காற்றி உள்ளதாகவும், சவாலான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தியவர் என்றும் பதிவிட்டுள்ளார். பொது சேவைக்கு இவரின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.