திபேத்திய மதகுருவான தலாய் லாமா அந்நாட்டு விடுதலைக்காக பல ஆண்டுக்காலமாக போராடி வருகிறார். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபேதுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதே அவர் கனவு. சீனாவால் தேடப்படும் தலாய் லாமாவுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. தலாய் லாமா ஹிமாச்சல பிரதேசத்தில் தரம்சாலா மலைவாசத் தளத்தில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்புக் கூட திபேத்துக்காக தன்னால் இனி போராடுவது இயலாது, அதற்கு வயது முதிர்வும் ஒரு காரணம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவாவில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலாய் லாமா " இந்தியாவின் பிரதமராக முகமது அலி ஜின்னா பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பியதாக தெரிவித்தார். நிலபிரபுத்துவ முறையில் அதிகாரங்கள் சில நபர்களின் கைகளிலேயே இருக்கும். இது மிகவும் ஆபத்தாகும். இதனால், நிலபிரபுத்துவ முறையைக் காட்டிலும், ஜனநாயக முறையே சிறந்தது" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தலாய் லாமா " இந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். இந்திய பிரதமராக ஜின்னா பதவியேற்றால், நாடு இரண்டாக பிளவுபடாது என்று காந்தி நினைத்தார்.
ஆனால் இதை ஜவாஹர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்க வேண்டும் என்று நேருவுக்கு இருந்த சுயவிருப்பமே இதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்". மேலும் " மகாத்மா காந்தி நினைத்தது போல், இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது.
ஜவாஹர்லால் நேருவை நான் நன்கறிவேன். அவர் நல்ல அனுபவசாலி; நல்ல மனிதரும் கூட. ஆனால், சில நேரங்களில் அவரும் தவறுகள் செய்துள்ளார் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.