இந்தியா

கோவாவின் பனாஜி தொகுதிக்கு இடைத் தேர்தலா ? தீயாய் பரவிய வதந்தி

webteam

கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்ற வதந்தி பரவிவருவது தெரியவந்துள்ளது.

கோவா முதலமைச்சராக இருந்‌த மனோகர் பாரிக்கர் மறைந்‌த நிலையில், புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் அதிகாலையில் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனையடுத்து நேற்று கோவா சட்டப் பேரவையில் அவர் தனது பெரும்பான்மையை 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் நிரூபித்தார்.

இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் தொகுதியான பனாஜிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது என்று தகவல்கள் பரவின. ஆனால் கோவாவில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் சிரோதா, மாண்ட்ரேம் மற்றும் மப்பூசா தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏனென்றால் சிரோதா மற்றும் மாண்ட்ரேம் தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் மப்பூசா தொகுதியில் தேர்வான பாஜக எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோஸா மறைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், “கோவாவில் தற்போது மூன்று சட்டப் பேரவை தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பனாஜி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை” என்று தெளிவுப் படுத்தியுள்ளது.

இதனிடையே சூலூர் தொகுதியின் எம்.எல்.ஏ கனகராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து கோவாவை போல் தமிழ்நாட்டிலும் சூலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் என வதந்திகள் பரவின. ஆனால் இடைத் தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.