நாடாளுமன்றம் pt web
இந்தியா

நெருங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் | ஆளும் கூட்டணியின் வியூகம் என்ன?

அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து மிக முக்கிய மசோதாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Prakash J

அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து மிக முக்கிய மசோதாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 150ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 13இடங்கள் இருந்தால் அரசமைப்பு சாசன மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான 3இல் 2 பங்கு பெரும்பான்மை ஆளுங்கூட்டணிக்கு கிடைத்துவிடும். மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் இந்த எண்ணிக்கை 153 ஆக உயரும். ஆனால் இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதால் அங்கு பாஜகவின் எண்ணிக்கை குறையும்.

மோடி

மறுமுனையில் மக்களவையில் ஏற்கெனவே உள்ள 293என்ற பலத்தோடு திரிணாமுல், உத்தவ் சிவசேனாவிலிருந்து பிரிந்து வருபவர்கள் எண்ணிக்கையை சேர்த்தால் ஆளும் கூட்டணியின் பலம் 319 ஆக மட்டுமே உள்ளது. இங்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண் 363 ஆக உள்ளது. இதற்கு 44 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே மாநிலங்களவையைவிட மக்களவையில் 3இல் 2 பங்கு ஆதரவைப் பெற ஆளும் கூட்டணி பெரிதும் போராட வேண்டியிருக்கும். ஒய்எஸ்ஆர், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளையும் சேர்த்தால்கூட 3இல் 2 பங்கு பெரும்பான்மை தற்போதுள்ள நிலையில் சவாலானதாகவே உள்ளது. ஆளும் கூட்டணி 3இல் 2 பெரும்பான்மையை பெறவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுபோன்ற சூழலில் தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு எதுபோன்ற நகர்வுகளை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.