parliament of india
parliament of india file image
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர்: ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்; நாடாளுமன்றத்தில் வெடிக்க இருக்கும் 7 பிரச்னைகள்!

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி அமைப்பது உள்ளிட்ட வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாய்ச் செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் தொடங்க இருக்கிறது. இக்கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றம்

மேலும், பாஜகவுக்கு எதிராகக் கைகோர்த்திருக்கும் 26 கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, அமலாக்கத் துறை சோதனை, டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் மணிப்பூர் கலவரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பான ஒரு தொகுப்பை இங்கு பார்ப்போம்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகிறது. இதில் 142 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 5,000 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அம்மாநில அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மணிப்பூர் கலவரம்

இது தவிர, மக்கள் பல நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இப்படியான நிகழ்வுகளால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ’மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி மணிப்பூர் மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்கூட மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி மெளனமாகவே இருந்துவருவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை ஆக்ரோஷத்துடன் எழுப்ப இருக்கின்றன.

விலைவாசி உயர்வு

நாடு முழுவதும் பல பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. குறிப்பாக, தக்காளியின் விலை அனைத்து மாநிலங்களிலும் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ளது. கிலோ 1க்கு ரூ.130 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை உயர்வைத் தொடர்ந்து இதர காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளன. சின்ன வெங்காயம் போன்றவை ரூ.200 வரை விற்கப்படுகிறது. மேலும் சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுதவிர, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. முக்கியமாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநில அரசுகளும், மாநில அரசுகள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசு தரப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டுகின்றனர். இருப்பினும், மத்திய அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வு பிரச்னையை கையிலெடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆக, இந்த மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வும் பெரிய அளவில் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம்

’டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும்’ என ஆளுநரைவிட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், ஆளுநரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது.

அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். இந்த சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. ஆக, இதுவும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

அமலாக்கத் துறை சோதனை

அமலாக்கத் துறையை அரசியல் நோக்கங்களுக்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால் மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் கடந்தகால வழக்குகளைத் தோண்டி எடுத்து, அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ED

இதற்கு சமீபத்திய உதாரணங்களாய், தமிழகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைச் சொல்லலாம். அதுபோல் டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை ஏவிவிடுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராகப் புயலைக் கிளப்ப உள்ளன.

பொது சிவில் சட்டம்

பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம். இதை நடைமுறைப் படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேரிடையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது சிவில் சட்டம் சிறுபான்மை சமூகங்களின் மதச் சுதந்திரத்தை மீறும் எனவும், தற்போதைய தனிநபர் சட்டங்கள் சிறப்பாகச் செயல்படுவதால், பொது சிவில் சட்டம் அவசியமில்லை எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

பொது சிவில் சட்டம்

இதனாலேயே இந்த பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவிர, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதால், இதுவும் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதமாக மாறலாம்.

பிரிஜ்பூசன் சரண் சிங் விவகாரம்

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக அக்கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்

’தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தும் அவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆக, இந்த விஷயத்திலும் மத்திய அரசு மெளனம் சாதித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்னையும் கூட்டத் தொடரில் வெடிக்கும் எனத் தெரிகிறது.

வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் வேலைவாய்ப்பும் ஒன்று. தாம் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் முன்னுரிமை அளிப்போம் எனக் கூறியிருந்தது. குறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரதின்போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாஜக உறுதி அளித்தது.

ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆக, இந்த வேலைவாய்ப்பு பிரச்னையும் இந்த கூட்டத்தொடரில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.