இந்தியா

“இந்தியாவுக்கு கிடைத்தப் பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது” - மக்களவையில் பிரதமர் உரை!

rajakannan

இந்தியாவுக்கு கிடைத்தப் பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று மக்களவையில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளை சாடியுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது, “குடியரசுத் தலைவர் உரையில் உள்ள அம்சங்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்பதில் மகிழ்ச்சி. குடியரசுத் தலைவர் உரையில் உள்ள முக்கிய அம்சங்களை யாரும் எதிர்க்கவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் குடியரசுத் தலைவர்” என்று அவர் குடியரசுத் தலைவரை புகழ்ந்தார்.

பின்னர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசுகையில், “உலகின் 5-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி இந்தியா சாதித்தது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சர்யத்துடன் காண்கின்றன. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்தியா உற்பத்தி நாடாக மாறி கொண்டிருப்பதை உலக நாடுகள் கண்டுக்கொண்டிருக்கின்றன. பெருந்தொற்று போன்ற அனைத்தையும் தாண்டி நம் நாடு முன்னேறி வருகிறது” என்றுப் பெருமையாக பேசினார்.

மேலும் தீவிரவாத செயல்கள் குறித்து பேசுகையில், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாத செயலும் நடைபெற்வில்லை. இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்கள் முதல் காஷ்மீர் வரை எந்தவொரு நக்ஸல் நடவடிக்கையும் கிடையாது” என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர், “இந்தியாவுக்கு கிடைத்தப் பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்தியுள்ளனர். ஊடகங்களில் வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிஇ குடியரசுத் தலைவரை அவமானம் செய்தார்” என்று கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு, பாஜக உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த வரவேற்பு அளித்தனர். இருப்பினும், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.