மக்களவை pt web
இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு | இரு அவைகளும் ஒத்திவைப்பு! 16 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக முடிவுக்கு வந்தது. மக்களவை, மாநிலங்களவை இரண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Prakash J

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 அமர்வுகளாக நடைபெற்ற இத்தொடரில் வக்ஃப் சீர்திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

”இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவையின் வேலை நேரம் 118 சதவீததிற்கும் அதிகமாக இருந்தது. வக்ஃப் திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது; அது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது” என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை

அதேபோல், “வக்ஃப் மசோதா தொடர்பான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 4 மணி வரை நடைபெற்றதாகவும் இது வரலாற்றிலேயே இல்லாத நீண்ட கால அளவு” என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். இது அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு நாடாளுமன்றம் தரும் செய்தி என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மறுபுறம், நேற்று ஒரே நாளில் மக்களவையில் பூஜ்ய நேரத்தில் 202 எம்பிக்கள் பேசி புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களவையில் 5 மணி நேரம் பூஜ்ய நேரம் கடைபிடிக்கப்பட்டதாகவும் இதில் 202 பேர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி 161 பேர் பேசியதே இதுவரை சாதனையாக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தலின் பேரில் பூஜ்ய நேரம் நீட்டிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.