முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதி சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முத்தலாக் தடை மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்டமாக மாறும். இந்நிலையில், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மோடி தன்னுடைய ட்விட்டரில், “தொன்மையான, மத்திய கால நடைமுறை ஒன்று தற்போது வரலாற்றின் குப்பை தொட்டிக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் முறையை நாடாளுமன்றம் ஒழித்துள்ளது. முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதி சரி செய்யப்பட்டுள்ளது. இது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி. இனி சமுதாயத்தின் சமநிலை நிலவும். இந்தியா இன்று மகிழ்ச்சி கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.
மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்பிக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். அத்துடன் வாக்களித்த எம்பிக்களின் செயல் வரலாற்றில் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.