இந்தியா

மகனுடன் சேர்ந்து ப்ளஸ் டூ தேர்வு எழுதிய பெற்றோர் தேர்ச்சி: பட்டப்படிப்புக்கு திட்டம்!

sharpana

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முஸ்தாவும் அவரது மனைவியும் தனது மகனோடு ப்ளஸ் டூ தேர்வெழுதி தேர்ச்சி ஆன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தொழிலதிபரான முஸ்தபாவுக்கு ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த மாணவியான நுசைபாவை திருமணம் செய்து வைத்துள்ளனர், அவரது பெற்றோர். ஆண்டுகள் கடந்தாலும் திருமணத்தால் தடைபட்ட தனது படிப்பு குறித்த கவலையிலேயே வாழ்ந்து வந்துள்ளார் நுசைபா. இந்த வயதிலும் படிப்புக் குறித்து கவலைக்கொள்ளும் மனைவியின் ஆர்வம் முஸ்தபாவுக்கும் தொற்றிக்கொண்டது. காரணம், அவரும் 10 ஆம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்தான். அதனால், மனைவியின் கவலையைப் போக்குவதோடு தானும் ப்ளஸ் டூ தேர்வு எழுத முடிவெடுத்து பயிற்சி மையங்களை அணுகத் தொடங்கினார். ஆனால், பயிற்சி மையங்கள் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. அப்போதுதான், கேரள எழுத்தறிவு மையத்தின் சமநிலைத் தேர்வுகள் குறித்து தங்கள் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளினார் முஸ்தபா.

உடனடியாக மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளில் சேர்ந்து படிக்கத் துவங்கியவர் தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் .  இதுகுறித்து 43 வயதாகும் முஸ்தபா கூறும்போது, “நாங்கள் இருவரும் ஒன்றாகவே வியாபாரத்தைக் கவனிக்கிறோம் என்பதால், ஒன்றாகவே படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறது. நாங்கள் படிக்கும்போது எனது மகனும் ப்ளஸ் டூ படித்துக்கொண்ருந்தான். அவனிடம் தான் விளக்கங்களையும் சந்தேகங்களையும் கேட்டுக்கொள்வோம். நாங்கள் தேர்ச்சிபெற அவனது உற்சாகமும் ஒரு காரணம். அவன் வகுப்பில் நன்கு படிக்கக்கூடிய மாணவன் என்பதால் எங்களுக்கு வழிகாட்டினான். அவன் பள்ளியில் தேர்வெழுதியபோது நாங்கள் அரசின் பயிற்சி மையத்தில் எழுதினோம். கொரோனாவால் சில நாட்கள் பயிற்சி வகுப்புக்குச் செல்ல இடைவெளி ஏற்பட்டது. ஆனாலும், நாங்கள் படித்துக்கொண்டே இருந்தோம். எங்கள் முயற்சி வீண்போகவில்லை” என்று பெருமையுடன் பேசும் முஸ்தபா, முதல் வகுப்பில் தேர்ச்சியும், அவரது மனைவி நுசைபா 80 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

 மேலும், “வழக்கமான பள்ளிகளில் இருக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் எங்களுக்கு இருந்தன. பேச்சுப்போட்டி, நடனம் போன்றவற்றில் பங்கேற்றேன்” என்கின்ற முஸ்தபா குடும்பத்தினர், தனது மகன் ஷம்மாஸுடன் இணைந்து தற்போது கல்லூரி படிப்புக்கும் தயாராகிவிட்டனர். பி.காம் இளங்கலை படிக்க முடிவு செய்துள்ள, இத்தம்பதிக்கு மேலும், இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

“இந்த வயதில் படிக்கிறோமே என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டோம். ஆனால், இப்போது தேர்ச்சி அடைந்ததால் எல்லோரும் பாராட்டுவதைப் பார்த்து இனி வெட்கப்படக்கூடாது என்று முடிவு செய்ததாலேயே பட்டப்படிப்பை தொடரவுள்ளோம்” என்றிருக்கிறார்கள்"