தெலுங்கானா மருத்துவர்
தெலுங்கானா மருத்துவர் twitter page
இந்தியா

காயம்பட்ட சிறுவனுக்கு பெவிக்குவிக்கை தடவினாரா மருத்துவர்?.. பெற்றோர் கொடுத்த அதிர்ச்சி புகார்!

Prakash J

கர்நாடகா மாநிலம் ரெய்சூர் மாவட்டம் லிங்கசூகூரைச் சேர்ந்தவர் வம்சிகிருஷ்ணா. இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 7 வயதில் பிரவீன் சௌத்ரி என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளனர். அங்கு சிறுவன் பிரவீன் சௌத்ரி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக கீழே விழுந்து காயமடைந்தார்.

இதில் அவருக்கு இடது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டுவிட்டு, உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படும் ஃபெவிக்விக்கைத் தடவியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனையில் அவர்கள் வாக்குவாதம் செய்தபோதும், நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, “என் மகனுக்கு கீழே விழுந்து காயம்பட்டதைத் தொடர்ந்து அவனை அழைத்துக்கொண்டு உடனே லீஜா முனிசிபாலிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவரான நாகார்ஜுனா, என் மகனின் காயத்திற்கு தையல் போடாமல், ஒட்டுவதற்குப் பயன்படும் ஃபெவிக்விக்கை தடவி சிகிச்சை அளித்தார். இதனால் என் மகன் வலியால் அழுது துடித்தான்.

இதையடுத்து நான், என் மகனை அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த மருத்துவர், ’ஏற்கெனவே சிகிச்சையளித்த மருத்துவர் உங்கள் மகனின் காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்தி உள்ளார்’ எனத் தெரிவித்தார். இதையடுத்தே நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மருத்துவர் தரப்பில் எவ்வித விளக்கமும் இன்னும் அளிக்கப்படவில்லை. காயத்திற்கு பூசப்படும் மருந்துதான் அளிக்கப்பட்டதாகவும், பார்ப்பதற்கு ஃபெவிக்விக் போல் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக மற்றொரு தரப்பில் தகவ்லகள் கூறுகின்றன. இருப்பினும் விசாரணைக்கு பின்பே உண்மை என்ன வென்று தெரியவரும்.

இதைத் தொடர்ந்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மருத்துவரின் அலட்சியம் குறித்து சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சுகாதாரத் துறையினர் அந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தி, சீல் வைக்கப்பட்டதாகவும், மருத்துவர் மற்றும் பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.