உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திரங்களை கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடத்த ஆளும் பாஜக கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் அதற்கு துணை போவதாகவும் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அத்துடன் வாக்கு இயந்திரங்களை உற்று கண்காணிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பர்டாபூர் என்ற பகுதியில் உள்ள வாக்கு இயந்திரங்கள் மையத்திற்கு அருகே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் டெண்ட் போட்டு தங்கியுள்ளனர். அந்த டெண்ட்டில் படுக்கைகள், ஏர் கூலர்கள், தொலைகாட்சிகள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்கள் தொலைநோக்கிகள் (பைனாகுலர்ஸ்) மூலம் வாக்கு இயந்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வாக்கி டாக்கிகளை வைத்து அவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். அண்மையில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்த, அக்கட்சியினர் இந்தக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.