சீனர்கள் என தவறாகக் கருதி வடகிழக்கு மாநிலத்தவர்களை துன்புறுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 471 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே சீனர்கள் எனக்கருதி வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. எனவே நீங்கள்தான் நோயை கொண்டு வந்தீர்கள் எனக் கூறி சீனர்கள் என நினைத்துக் கொண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது சிலர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து சீனர்கள் என தவறாகக் கருதி வடகிழக்கு மாநிலத்தவர்களை துன்புறுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியில் அதிகரிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்கத் தவறினால், அது நாடு முழுவதும் பரவக்கூடும் என்றும் விரைவில் பாகிஸ்தானியரைப்போல இருப்பவர்களையும் தாக்கும் ரவுடித்தனத்துக்கு வழிவகுத்துவிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.