பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இணைக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக வருமான வரித்துறை www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையதள பக்கத்தை உருவாக்கியது. அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்து கொள்ளலாம். இதனை எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இணைக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
உங்கள் போனில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அதன் பின் சிறு இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம்.
UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>
அதாவது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 123456789012 ABCDE1234F என்ற வடிவத்தில் அனுப்ப வேண்டும்.