பான் கார்டுடன் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 31ம் தேதி வரை இணைக்கலாம் என்று மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இத்துடன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிட்டது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் நீக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாளாக இருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஏராளமானோர் வருமான வரித்துறை இணைய தளத்தில் முட்டி மோதியதால், அந்த இணைய தளம் முடங்கியது.
இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி தேதியை ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இத்துடன் மத்திய வருவாய் துறை மற்றும் மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு பான் கார்டுடன் ஆதார் இணைக்க, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.