இந்தியா

“பாக். ராணுவம் இனி ஊடுருவாது” - இந்திய ராணுவப் படை தளபதி 

“பாக். ராணுவம் இனி ஊடுருவாது” - இந்திய ராணுவப் படை தளபதி 

webteam

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவாது என்று இந்திய ராணுவப் படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற ஒரு தாக்குதல் திட்டத்தை நிகழ்த்தியது. இந்தப் போர் மற்றும் ஆபரேஷன் விஜய் ஆகியவற்றில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், போரின் 20 ஆண்டுகால நினைவு தினம் அனுசரிக்கவும் ராணுவப்படை திட்டமிட்டது. இதன்படி நேற்று ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவப் படையின் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். 

இதில், “பாகிஸ்தான் கார்கில் போரில் இந்திய எல்லை பகுதிகளுக்குள் ஊடுருவியது போல் தற்போது நுழைய வாய்ப்பில்லை. வரும் நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் நுழைய அச்சப்படும். ஏனென்றால் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் ஏற்படும் பின்விளைவுகள் தற்போது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும். அத்துடன் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் அனைத்தும் தற்போது நல்ல பாதுகாப்புடன் இருக்கின்றன. மேலும் ராணுவ வீரர்கள் இந்தப் பகுதிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார். 

இந்த விழாவில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களின் வீரத்தை பாராட்டும் விதமாகவும் ஒரு வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.