இந்தியா

“புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு” - பாக். அமைச்சர் ஒப்புதல்

webteam

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் வெடிகுண்டு வெடித்து அதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்தபோது இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்றார்.

இதில் அபிநந்தனின் விமானம் விபத்துக்குள்ளாகி அவர் பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பின்னர், இந்திய அரசின் முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்பதால், வேர்த்து கை, கால் நடுங்கும் அளவிற்கு அஞ்சியே பாகிஸ்தான் அவரை விடுவித்தது என ஏற்கெனவே எம்பி ஒருவர் நேற்று பேசியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள அமைச்சரான ஃபவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பேசினார். அப்போது புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித்தொடர்பு இருந்தது உண்மைதான் என்ற வகையில் பேசியுள்ளார். புல்வாமா தாக்குதல் நடத்தியது, சதித்திட்டம் தீட்டியதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்தியாவை அவர்கள் இடத்திற்கே சென்று தாக்குதல் நடத்தியுள்ளோம். இது இம்ரான்கான் தலைமையில் நமக்கு கிடைத்த வெற்றி. இதில் நாம் அனைவருக்கும் பங்குண்டு” எனத் தெரிவித்துள்ளார்.