காணாமல் போன விமானி பாகிஸ்தான் வசம் உள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று வெளியுறுவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், விமானப்படை துணை மார்ஷல் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ரவிஷ் குமார், “பாகிஸ்தானின் எப்-16 விமானப்படை விமானம் ஒன்று எல்லையில் அத்துமீறிய போது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது மிக் 21 விமானத்தை நாம் இழந்துவிட்டோம். ஆனால், நம்முடைய விமானியின் நிலை குறித்து தெரியவில்லை.
தங்கள் பிடியில் அந்த விமானி இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அந்த தகவலை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு மக்கள் மீது நாம் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி இருந்தோம்” என்றார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும், இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.