இந்தியா

நுபுர் சர்மாவை கொலை செய்ய இந்தியாவுக்கு வந்த பாக். தீவிரவாதி - பகீர் தகவல்

ஜா. ஜாக்சன் சிங்

முகமது நபி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதி ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, கடந்த மே மாதம் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கற்றார். அப்போது அவர் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை கூறினார். இது நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் பூதாகரமாகி அரபு நாடுகள் இந்தியாவை கண்டிக்கும் அளவுக்கு சென்றது.

இதன் காரணமாக, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நுபுர் சர்மாவுக்கு அதிக அளவில் கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

தீவிரவாதி ஊடுருவல்

இந்நிலையில், கடந்த 16-ம் தேதியன்று நள்ளிரவு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்துக் கொண்டிருந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் இருந்து பெரிய கத்தி, மத நூல்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அவரது பெயர் ரிஸ்வான் அஷரஃப் என்பதும், பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் - இ - லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. முகமது நபி குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை கொலை செய்வதற்காக எல்லையை கடந்து ராஜஸ்தானுக்குள் ஊடுருவியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அஜ்மீர் தர்காவில் வழிபட்ட பின்னர், டெல்லிக்கு சென்று நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிஸ்வானிடம் தற்போது ரா, ஐ.பி. உளவுத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.