ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், நடுநிலை விசாரணைக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை (07/05/25) பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், “கண்மூடித்தனமாக (பாகிஸ்தான் தரப்பில்) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவம் உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.