asim munir x page
இந்தியா

பஹல்காம் தாக்குதல் | கவனம் பெறும் பாகிஸ்தான் ராணுவ தளபதி.. ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர்தான் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ளார் என இந்திய ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர பிரதாப் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.

PT WEB

கடந்த 16ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசியிருந்த ஆசிம் முனிர், காஷ்மீர் மக்களின் சுதந்திரப்போராட்டத்திற்கு தங்கள் நாடு ஒத்துழைக்கும் என்றும் காஷ்மீரி சகோதரர்களை ஒரு போதும் கைவிட்டுவிட மாட்டோம் என்றும் ஆசிம் முனிர் பேசியிருந்தார். காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் உயிர்நாடி ரத்தநாளம் போன்றது என்றும் அவர் ஆவேசமாக பேசியிருந்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் மற்றிலும் எல்லா விதத்திலும் முரண்பட்டவை என்றும் அவர் பேசியிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அவரது பேச்சை இந்தியாவும் கண்டித்திருந்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த தாக்குதலுக்கும் ஆசிம் முனிர் பேசிய கருத்துக்கும் தொடர்பிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ”பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர்தான் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ளார்” என இந்திய ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர பிரதாப் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.

asim munir

அதேபோல், ஆசிம் முனிர் ஒரு பயங்கரவாதி என்றும் அவரை ஒசாமா பின் லேடனுடன் ஒப்பிட முடியும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி மைக்கேல் ருபின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ஆசிம் முனிர் மாளிகையில் வாழ்கிறார். ஒசாமா குகைக்குள் வாழ்ந்தார் என்பதுதான் இருவருக்கும் இடையிலான வித்தியாசம். பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்கவேண்டும். ஆசிம் முனிரை பயங்கரவாதியாக அறிவிக்கவேண்டும்” என்றும் அமெரிக்க அரசை மைக்கேல் ருபின் வலியுறுத்தியுள்ளார். அதுபோல், பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான PTIயும், “ஆசிம் முனிர் போரின் மீது ஆர்வம் மிகுந்தவர் என்றும் அவரது போக்கு பாகிஸ்தானை சீர்குலைக்கும்’’ எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.