பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் pt
இந்தியா

’ஒப்புதலை மீறி பாகிஸ்தான் தாக்குதல்..’ இருளில் மூழ்கிய நகரங்கள்! பதிலடி கொடுக்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது என தகவல் வெளியானது.

Rishan Vengai

இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது.

operation sindoor

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவமும், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வந்தது.

அமெரிக்கா தலையீடு.. போர் நிறுத்த அறிவிப்பு!

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசினார்.

அமெரிக்காவின் நீண்ட இரவு மத்தியஸ்தம் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உறுதி செய்த இந்தியா..

விக்ரம் மிஸ்ரி

இதையடுத்து, இந்தியா போர் நிறுத்தத்தை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா - பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் பேசினர். இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஒப்புதலை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்!

அமெரிக்கா தலையீடு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர் நிறுத்தம் அறிவிப்பு என இன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவண்ணம் இருந்துவருகிறது.

தாக்குதல் நிறுத்தம் அறிவிப்பு வெளியான 3 மணிநேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திவருவதாக செய்திகள் வெளியானது. வெளியான செய்திகளை ஒட்டி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும், ஸ்ரீநகருக்குள் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்பதாகவும், போர் நிறுத்தம் என்ன ஆனது? என்றும் எக்ஸ்தளத்தில் பதிவிட்டு பதட்டமான சூழல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், அப்படி எதுவும் தாக்குதல் நடைபெறவில்லை என்ற செய்திகள் சிறிது நேரத்தில் வெளியாகின.

இந்திய எல்லையில் மீண்டும் தாக்குதல்

அதேநேரத்தில் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏன் தொடர் தாக்குதல் நடந்துவருவது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.