இந்தியா

இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Rasus

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புத் தான் காரணம் என சொல்லப்படுகிறது.  இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் குறித்து முதல்முறையாக பேசிய இம்ரான் கான், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறினார். ஆதாரத்துடன் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது குறித்து யோசிக்க மாட்டோம். இந்தியா மீது தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.