பஹல்காம் ராய்ட்டர்ஸ்
இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு 3 இடங்களை நோட்டமிட்ட தீவிரவாதிகள்.. விசாரணையில் பகீர் தகவல்!

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு 3 இடங்களை தீவிரவாதிகளாக நோட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருநாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, வேறு 3 இடங்களை அவர்கள் நோட்டமிட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் இருந்ததாக, அந்த தாக்குதலில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட தரைவழிப் பணியாளர்களில் (OGWs) ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.மேலும் விசாரணையில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 15ஆம் தேதி பஹல்காமை அடைந்து, பைசரன் பள்ளத்தாக்கு உட்பட குறைந்தது நான்கு இடங்களில் உளவு பார்த்துள்ளனர். இதில் அரு பள்ளத்தாக்கு, உள்ளூர் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் பேத்தாப் பள்ளத்தாக்கு உள்ளிட்டவையும் பயங்கரவாதிகளின் கண்காணிப்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மண்டலங்களில் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

பஹல்காம்

விசாரணையை முன்னெடுத்து வரும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), வெளிநாட்டு போராளிகளுக்கு ஆதரவளித்ததாக நம்பப்படும் சுமார் 20 OGW-களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். உளவுத்துறை வட்டாரங்களின்படி, பயங்கரவாதிகளுக்கு உளவு மற்றும் தளவாட ஆதரவுடன் உதவுவதில் குறைந்தது நான்கு OGWக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். தாக்குதலுக்கு முந்தைய கட்டத்தில் இப்பகுதியில் மூன்று செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு சாதனங்களிலிருந்து வரும் சிக்னல்கள் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பாக NIA மற்றும் புலனாய்வு அமைப்புகள் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 186 பேர் மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் தொடர்புடைய வீடுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.