ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அதேநேரம், ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
மறுபுறம், சாலையோர உணவகங்களில் ஓய்வெடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதுகுறித்த சம்பவங்களை விவரித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள், அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்தவர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களிடம் பெயர்களைக் கேட்டு விசாரித்துள்ளனர். அதன்பிறகே, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதிலும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இஸ்லாம் வசனத்தைக் கூறச் சொல்லிக் கேட்டுள்ளனர். அது அவருக்குத் தெரியாததால், உடனே அவரைச் சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த தாக்குதலில், தனது கணவர் மஞ்சுநாத்தை இழந்த சுற்றுலாப் பயணி பல்லவி, பகிர்ந்துகொண்ட துயர அனுபவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அவர் கன்னட ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அதில், ”கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த என் கணவர் மஞ்சுநாத் மற்றும் எங்கள் மகன் அபிஜேயாவுடன் நான் இங்கு வந்திருந்தேன். நாங்கள் அங்கு குதிரையில் சென்றிருந்தோம். என் மகன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. அதனால் என் கணவர் ரொட்டி எடுக்கச் சென்றார். முதலில், துப்பாக்கிச் சத்தம் கேட்டது, இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நினைத்தோம். பின்னர் மக்கள் ஓடத் தொடங்கினர்.
என் கணவர் ஏற்கெனவே சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டேன். அவர் தலையில் சுடப்பட்டிருந்தார். நான் எதிர்வினையாற்ற முடியாமல் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்தேன். என் கணவர், என் கண்முன்னே இறந்துவிட்டார். எனக்கு அழவோ எதிர்வினையாற்றவோ முடியவில்லை. என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை.
எங்களுடன், என் கார் டிரைவரும் இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதர். இந்துக்கள் குறிவைக்கப்படுவதாக அவர் என்னிடம் கூறினார். 'பிஸ்மில்லாஹ்' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த மூன்று பேர், நாங்கள் பாதுகாப்பாக செல்ல உதவினார்கள். மூன்று முதல் நான்கு தாக்குதல்காரர்கள் இருப்பதை நான் கவனித்தேன். என் கணவர் கொல்லப்பட்ட பிறகு, நான் பயங்கரவாதிகளில் ஒருவரை எதிர்கொண்டு, 'மேரே பதி கோ மாரா ஹை நா, முஜே பி மாரோ' (நீ என் கணவரைக் கொன்றுவிட்டாய், என்னையும் கொல்லு) என்று சொன்னேன். என் மகனும் அவனை எதிர்கொண்டு, 'குட்டே, மேரே பாப்பா கோ மாரா, ஹுமைன் பி மார் தாலோ' (நீ நாயே, நீ என் தந்தையைக் கொன்றாய், எங்களையும் கொல்லு) என்று சொன்னான். அதற்கு அவன், ‘நஹின் மாரெங்கே. தும் மோடி கோ ஜாகே போலோ’ (உன்னை நான் கொல்ல மாட்டேன். போய் மோடியிடம் சொல்லுங்கள்) என்று பதிலளித்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தொடர்ந்து, பயங்கரவாதிகள் எங்கள் முன்னாடியே இருந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இல்லை. கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் குறிவைக்கப்பட்டனர். புதுமணத் தம்பதிகள் பலர் இருந்தனர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். பெரிதும், இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர். சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்தனர். என் கணவரின் உடலை விமானம் மூலம் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் மூவரும் ஒன்றாக ஊர் திரும்ப வேண்டும். என் கணவரின் உடலுடன் மட்டுமே நான் திரும்புவேன். தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரும், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஏப்ரல் 24ஆம் தேதி (நாளை) அவர்கள் திரும்புவதாக இருந்தது. இந்த நிலையில்தான் அந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் மஞ்சுநாத்தின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மஞ்சுநாத்தின் தாய்க்கு அவரது மகன் இறந்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மஞ்சுநாத் காயமடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் பத்திரமாகத் திரும்புவார் என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மஞ்சுநாத் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்றும் அவரது மனைவி பல்லவி வங்கி ஒன்றின் மேலாளர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.