ஆதில்கள் எக்ஸ் தளம்
இந்தியா

பஹல்காம்| ஒரே மண்ணில் பிறந்த இரண்டு ’ஆதில்’கள்.. தீவிரவாதி மற்றும் குதிரை வீரரின் கதை!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், அதே மண்ணைச் சார்ந்த இருவர் எதிரெதிர் பக்கங்களில் இருந்துள்ளனர். ஆம் அம்மண்ணில் பிறந்து ஒரே பெயரைக் கொண்ட இருவரில், ஒருவர் நாட்டுக்காக உயிர் இழந்துள்ளார். இன்னொருவர், நாட்டு மக்களை அழித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. அதை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் கதை, சோகத்தை அளவிட முடியாததாக இருக்கிறது. அந்த அளவுக்கு கடுமையான வடுக்களை பயங்கரவாதிகள் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த தாக்குதல் சம்பவத்தில், அதே மண்ணைச் சார்ந்த இருவர் எதிரெதிர் பக்கங்களில் இருந்திருப்பதுதான். ஆம் அம்மண்ணில் பிறந்து ஒரே பெயரைக் கொண்ட இருவரில், ஒருவர் நாட்டுக்காக உயிர் இழந்துள்ளார். இன்னொருவர், நாட்டு மக்களை அழித்துள்ளார். அந்த இருவரைப் பற்றிய கட்டுரைதான் இது. ஒருவர், பயங்கரவாதி ஆதில் உசேன் தோக்கர். இன்னொருவர் குதிரை சவாரி வழிகாட்டியான சையத் ஆதில் உசேன் ஷா. இவர், பஹல்காம் மலைப்பகுதி வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் குதிரைவாலியாக இருந்தார். தினமும் காலை சென்று மாலை வரை குதிரைவாலியாகப் பணியாற்றும் அவருடைய சொற்ப வருமானம் ஒருநாளைக்கு ரூ.300 ஆக இருந்துள்ளது. அதில்தான் அவருடைய மொத்த குடும்பமும் வாழ்ந்து வந்துள்ளது. வயதான பெற்றோர்களுக்கு மருந்து வாங்கவும், ஒட்டுமொத்த அரிசி வாங்கவுமே அந்தப் பணம் சரியாக இருந்துள்ளது.

சையத் ஆதில் உசேன் ஷா

இந்த நிலையில்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலைக் கண்டு புறமுதுகிட்டு ஓடாமல், அவனுடைய துப்பாக்கியைப் பறிக்க முயன்றதில் வீர மரணம் அடைந்தார், உஷேன் சா. அவருடைய மரணத்தைத் தாங்காது அவரது அம்மா, “அவர் ஒருநாளைக்கு 300 ரூபாய் சம்பாதித்து வந்தார். மாலையில் நாங்கள் அரிசி வாங்கி ஒன்றாகச் சாப்பிடுவோம். அவர் என் மூத்த மகன். இப்போது, ​​யார் உணவு கொண்டு வருவார்கள்? யார் மருந்து கொண்டு வருவார்கள். மற்றவர்களைக் காப்பாற்ற முயன்று, இன்று எனது மகன் அவனது உயிரையே இழந்துவிட்டான்” எனக் கண்ணீர்ப் பெருக்கில் அவர் சொன்னாலும் அவருடைய மரணத்தில் வீரம் ததும்பியிருப்பதைக் கண்டு மண்ணிற்காக மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறார். மேலும், அவருடைய மரணத்திற்குத்தான் இந்தியாவும் இன்று, ராயல் சல்யூட் அடித்துள்ளது. மண்ணின் முதல்வரே அந்த மகனுக்காக மரியாதை செலுத்தியுள்ளார். தவிர, அந்த மகனின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யும் என்கிற உத்தரவாதத்தையும் அளித்துள்ளார்.

மற்றவர்களைப் பாதுகாக்கும் பணியில் ஆதில் உசேன் ஷா என்ற ஓர் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவரான ஆதில் உசேன் தோக்கர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த மண்ணின் சதிகாரராக அடையாளப்படுத்தப்படுகிறார். போலீஸாரின் சந்தேக பட்டியலில் இரண்டு பாகிஸ்தானியர்களான ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகியோருடன் இந்த ஆதில் உசேன் தோக்கரும் படுகொலையைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கட்டம்கட்டப்படுகிறார். ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ தெற்கே உள்ள பிஜ்பெஹாராவில் உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ஆதில் உசேன் தோக்கர்.

ஆதில் உசேன் தோக்கர்

கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், அங்கு தீவிரவாத பயிற்சி பெற்று, அதற்குப் பின்பு கடந்த ஆண்டு ஜம்முவுக்குத் திரும்பியுள்ளார். இவர், லஷ்கர் இ தொய்பாவின் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு உள்ளூர் வழிகாட்டியாகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அப்பாவி உயிர்களை அழித்த ஆயுதம் தாங்கியவர்களை அழித்தே தீருவோம் என உறுதிபூண்டுள்ள இந்திய ராணுவம் அதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக, இன்று நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகளுக்குத் துணை போன ஆதில் உசேன் தோக்கர் தங்கியிருந்த வீட்டை, இந்திய ராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. ஒரே மண்ணில் பிறந்து இரு துருவங்களில் பயணித்த ஆதில்களின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.