terrorists houses x page
இந்தியா

பஹல்காம் தாக்குதல் | தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகள் அழிப்பு!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் வீடுகளை இந்திய ராணுவம் அழித்துள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள். நேற்று நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இன்று காலைவரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடியவிடிய துப்பாக்கி சண்டை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

terrorists houses

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர், "எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், பஹல்காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரைச் சேர்ந்த 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத்தில் இருந்த தீவிரவாதி ஆசீப் ஷேக்கின் வீடு குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. அதுபோல, அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருந்த மற்றொரு தீவிரவாதியான அடில் உசேன் தோக்கர் வீடும் இன்று காலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. அவர்களது வீடுகளுக்குள் சில வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.