இந்தியா

"பாஜக வெற்றிப்பெற்றதற்கு சிலருக்கு பத்ம விருதுகள் கொடுக்கலாம்"-நக்கலடித்த சஞ்சய் ராவத்

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்க வேண்டும் என்று சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், உத்தரபிரதேசம் அவர்களின் மாநிலம். உத்தரபிரதேச தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாஜகவின் வெற்றி அல்ல. மாறாக, சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் பல மடங்கு உயர்ந்ததிருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த தேர்தலில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி, இந்த தேர்தலில் 125 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. அதன் வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான காரணம் பகுஜன் சமாஜும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் தான். தலித் வாக்குகளையும், இஸ்லாமியர்களின் வாக்குகளையும் அக்கட்சிகள் பிரித்ததால் தான் பாஜக அங்கு பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனது. எனவே மாயாவதிக்கும், ஒவைசிக்கும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்க வேண்டும் என அவர் கூறினார்.